×

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர்

எனக்கு வயது 30. சமீபமாக என் சிறுநீரில் கெட்ட வாடை வீசுகிறது. அடிவயிற்றில் தசை இறுக்கமும் கடுமையான வலியும் இருக்கிறது. அடிக்கடி சிறுநீர்க் கழிக்கிறேன். போதுமான அளவு தண்ணீரும் பருகுகிறேன். எதனால் இப்பிரச்னை வருகிறது?

– என்.ரமாபிரபா, கோவில்பட்டி.

பொதுவாக, ஆண்களைவிட பெண்களுக்கு சிறுநீரகப் பாதைத் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுநீர்ப் பாதைத் தொற்று, மலச்சிக்கல், சிறுநீர் முழுமையாக வெளியேறாமல், சிறுநீர்ப் பையிலேயே தேங்கி இருத்தல் போன்ற காரணங்களால், சிறுநீரில் துர்நாற்றம் வீசக்கூடும். இந்தப் பிரச்னை சிறுநீர்ப் பையில் பாக்டீரியா தொற்று உருவாவதால் வரக்கூடும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழித்துவிட்டு வந்ததுமே மீண்டும் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, அடிவயிற்றில் வலி, காய்ச்சல், சிறுநீரில் துர்நாற்றம் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்தப் பிரச்னைக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் உள்ளன. அடிவயிற்றை இறுக்கமாகப் பிடிக்கும் ஆடைகளை அணியக் கூடாது. நிறைய தண்ணீர்ப் பருக வேண்டும். மருத்துவரிடம் சென்று சிறுநீர்ப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து என்ன சிக்கல் என்று பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

எனக்குப் பெண் குழந்தை பிறந்து இரண்டு வாரங்களாகின்றன. கடந்த சில நாட்களாக அவள் இடது கண் மட்டும் பொங்கிக்கொண்டே இருக்கிறது. என் வீட்டில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்தால் சரியாகும் என்றார்கள். ஆனால், ஆகவில்லை. என்ன பிரச்னையாய் இருக்கும்?
– ஜே.எம்.மித்ரா, கும்பகோணம்.

குழந்தை பிறந்தவுடன் அதன் கண்ணீர்க் குழாய் (Nasolacrimal Duct) தானாகத் திறந்துவிடும். ஐந்து சதவீதக் குழந்தைகளுக்கு மட்டும் திறக்காமல் அடைத்துக்கொள்ளும். இதனால் கண்ணில் சுரக்கும் நீர் இக் குழாய் வழியே வெளியே வராமல் கண்ணின் வழியே வடியும். சில குழந்தைகளுக்கு நீர்ப் பையில் கிருமித் தாக்குதல் ஏற்பட்டால், அதன் காரணமாகவும் கண்களில் அழுக்கு பொங்கும். இதனை டிஸ்சார்ஜ் என்பார்கள். நீர்ப்பை மீது, அதாவது மூக்கின் பக்கவாட்டில் மூன்று மாதங்கள் மசாஜ் செய்துவர, சரியாகும். என்ன இருந்தாலும் அலட்சியம் வேண்டாம். உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி, கண்களைப் பரிசோதித்து, உடனே சிகிச்சை எடுப்பது மிகவும் நல்லது.

என் வயது 28. எனக்கு சமீபமாக நாக்கு வீங்கி இருக்கிறது. சில சமயங்களில் மூச்சு விட சிரமமாக இருக்கிறது. போன மாதத்தில் ஒருநாள் இப்படி இருந்தது. பிறகு அதுவாகவே சரியாகிப் போனது. இதற்கு என்ன காரணம் டாக்டர்?
– கே.எஸ்.ஆனந்தன், திருச்சி.

நாக்கு வீங்குவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் காலை எழுந்ததும் பல் துலக்கும்போது, நாவைச் சுத்தம் செய்கிறேன் என நன்றாக நகங்களால் கீறிவிடுவார்கள். இதனால், எடிமா (Edima) எனும் உட்புறத் திரவம் கசியச் தொடங்கும். இது நாவு வீக்கத்தைக் கொடுக்கும். முதல் நாள் இரவு உட்கொண்ட மசாலாப் பொருட்கள், ஃபாஸ்ட் ஃபுட்கள், ஜங்க் ஃபுட்கள் போன்றவற்றாலும் மது, சிகரெட் போன்றவற்றாலும் நாவு வீங்கும்.

சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், இதயச் செயல் இழப்பு போன்றவற்றுக்குத் தரப்படும் ஏஸ் இன்ஹிபிட்டர் எனப்படும் லிசினோப்ரில் உட்கொள்வதாலும் நாக்கு வீக்கம் ஏற்படக் கூடும். ஏதாவது உணவால் ஒவ்வாமை இருந்தாலும் நாக்கு வீக்கம் ஏற்படும். மிக அரிதாக வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக குளோஸிட்டிஸ் (Glossitis) எனும் நாக்கு வீக்கப் பிரச்னை ஏற்படும். ஆனால், இது ஒரே நாளில் திடீரென ஏற்படும் பிரச்னை அல்ல. எதுவாய் இருந்தாலும் அருகில் உள்ள மருத்துவரை உடனே அணுகி, நாக்கு வீக்கத்துக்கான காரணம் என்னவெனக் கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

எனக்கு அக்குளில் அக்கி எனப்படும் சிறு சிறு கொப்புளங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் சில மாதங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருக்கிறது. பிறகு, மீண்டும் இது ஏற்படுகிறது. இந்த அக்கி ஏன் ஏற்படுகிறது? இதற்கு நிரந்தரத் தீர்வு உண்டா?
– நம்பிராஜன், மானாமதுரை.

அக்குளில் ஏற்படும் அக்கியை ஷிங்கில்ஸ் அல்லது ஹெர்பிஸ் ஜோஸ்டர் என அழைப்பார்கள். சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் நரம்பு மண்டல அணுக்களுக்குள் தங்கி சிறிது காலம் கழித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது மறு உயிர்ப்பு பெற்று இந்தப் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. வைரஸ் கிருமிகள் மறு உயிர்ப்பு பெறும்போது உடலின் ஒரு பகுதியில் மட்டும் வலி போன்ற உணர்வு ஏற்படும். முதுகு நரம்புகளில் இருந்து வைரஸ் ஒரு நரம்பு வழியாக வெளிப்படுவதால் இந்த வலி ஏற்படுகிறது.

இந்த வலி சில நாட்கள் நீடிக்கும். பின்னர், தோலில் சீழுடன் சிறு சிறு கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிக்கும். தோல் கொப்புளங்கள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீடித்துப்பரவும். இவை சில நாட்களில் காய்ந்து பொருக்குகளாகி உதிரும். இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகலாம். இந்தக் கொப்புளங்கள் மற்றவர்களுக்கும் பரவும் தன்மை கொண்டவை. எனவே, இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து மற்றவர்கள் விலகி இருக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் சின்னம்மை மரணத்தையே ஏற்படுத்த வல்லவை. இந்தக் கொப்புளங்களுக்கு ஈரமான குளிர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இதற்கு அலுமினியம் அசிடேட் கலவையைப் பயன்படுத்தலாம். கொப்புளங்களை நன்கு கழுவ வேண்டும். அவற்றை கட்டுப்போட்டு மறைக்கக் கூடாது. காலமைன் லோஷன் கிரீம்களைப் பூசலாம். வலி இருக்கும் என்றால் டாக்டரின் பரிந்துரையின் பேரில் வலி நீக்கும் மாத்திரைகள் மற்றும் களிம்புகளைத் தடவலாம். வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்துப் பூசுவதாலும் இவை கட்டுப்படுகின்றன.

இந்தக் கட்டிகள் முகத்தில் குறிப்பாக கண்களுக்கு அருகே தோன்றினால் உடனே மருத்துவர் உதவியை நாட வேண்டும். கவனிக்காமல் விட்டால் பார்வை இழப்புகூட ஏற்படக்கூடும். வலி நீக்கி மருந்துகள், மனச்சோர்வுக்கான மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சைகூட தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்குத் தர வேண்டியது இருக்கும். அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

The post கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா appeared first on Dinakaran.

Tags : Professor of Medicine ,Muthiah ,N. Ramaprabha ,
× RELATED கவுன்சலிங் ரூம்